வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பெட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் சௌமீயா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சௌமீயா சர்க்கார் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸ் 4 ரன்களுக்கும், கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தன்ஸித் ஹசனும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 46 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவருடன் இணைந்து விளையாடிய அஃபிஃப் ஹொசைனும் 24 ரன்களில் நடையைக் கட்டினர். இதையடுத்து வந்த மஹ்முதுல்லா ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய ஜக்கர் அலி, ரிஷாத் ஹொசைன் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் மஹ்முதுல்லாவுடன் இணைந்த தன்ஸிம் ஹசன் சாகிப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மஹ்முதுல்லா தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இருவரும் இணைந்து எட்டாவது விக்கெட்டிற்கு 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தன்ஸிம் ஹசன் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 62 ரன்களை எடுத்த கையோடு மஹ்முதுல்லாவும் பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் ஷொரிஃபுல் இஸ்லாம் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்களைச் சேர்த்தர். இறுதியில் வங்கதேச அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் பிராண்டன் கிங் அரைசதம் கடந்த நிலையில், மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய எவின் லூயிஸ் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய கேசி கார்டியும் பிராண்டன் கிங்குடன் இணைந்து சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

Advertisement

அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிராண்டன் கிங் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 82 ரன்னிலும், அவருட இணைந்து விளையாடி வந்த கேசி கார்டி 45 ரன்னிலும் என விக்கெட்டுகள் இழந்தனர். அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஷாய் ஹோப் 17 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 36.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News