இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 7 ரன்னிலும், எவின் லூயிஸ் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேசி கார்டி மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் இணை பொறுப்புடன் விளைடாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இருவரும் இணைந்து தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 143 ரன்களாக உயர்ந்த நிலையில், 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 72 ரன்களை எடுத்த கையோடு கேசி கார்டி தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து ஷாய் ஹோப்புடன் இணைந்து விளையாடிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 54 ரன்களை எடுத்த நிலையில் ரூதர்ஃபோர்ட் தனது விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷாய் ஹோப் தனது 17ஆவது சதத்தைப் பாதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய ஷிம்ரான் ஹெட்மையர் தனது பங்கிற்கு 3 சிக்ஸர்களை விளாசி 24 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியான் திரும்பினார்.
Also Read: Funding To Save Test Cricket
மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 117 ரன்களைக் குவித்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதியில் மேத்யூ ஃபோர்ட் அடுத்தடுத்து ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி 23 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 328 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜான் டர்னர் மற்றும் ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.