வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 07ஆம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸீல் 357 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக டோனி டி ஸோர்ஸி 78 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 86 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வாரிகன் 4 விக்கெட்டுகளையும், ஜெயடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 233 ரன்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேசி கார்டி 42 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 36 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் 4 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்களைச் சேர்த்துள்ளது. இதனையடுத்து 154 ரன்கள் முன்னிலையுடன் இன்றைய தினம் ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 38 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக வீரரான டோனி டி ஸோர்ஸியும் 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்ததுடன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 298 ரன்களை இலக்காகவும் நியமித்தது.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க் பிராத்வைட் ரன்கள் ஏதுமின்றியும், அவரைத்தொடர்ந்து மைக்கைல் லூயிஸ் 9 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கேசி கார்டி - அலிக் அதானாஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேசி கார்டி 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலிக் அதானாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவேம் ஹாட்ஜ் 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அலிக் அதானாஸ் 92 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார். அதேசமயம் ஜேசன் ஹோல்டர் 32 ரன்களையும், ஜோஷுவா டா சில்வா 2 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கேசவ் மஹாராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.