விராட் - ஸ்மித் இடையேயான போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - கிளென் மேக்ஸ்வெல்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளது. மேற்கொண்டு பெர்த் மைதானத்தில் தொடரின் முதல் போட்டியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பலிரவு ஆட்டமாக அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னிலும், கடைசி போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி இடையேயான போட்டியை காண ஆவலுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதுகுறித்து பேசிய அவர், “சர்வதேச கிரிக்கெட்டின் பேட்டிங் சூப்பர் ஸ்டார்களான விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இடையே பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, கடுமையான போட்டி இருக்கும் என நினைக்கிறேன். பார்டர் - கவாஸ்கர் தொடரில் அவர்கள் இருவரும் ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வெல்ல முயற்சி செய்வார்கள். இந்த இருவரில் யாரெனும் ஒருவர் நிறைய ரன்களை எடுக்கப் போகிறார். அவர்கள் இருவரும் அதிக ரன்கள் குவிக்கத் தவறினாலும், நம் தலைமுறையின் இரண்டு மிகச்சிறந்த வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.