மகளிர் டி20 சேலஞ்ச்: ஷஃபாலி வர்மா அதிரடியில் வெலாசிட்டி அசத்தல் வெற்றி!
மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ் - வெலாசிட்டி அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர்நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுரின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரித் கவுர் 71 ரன்களைச் சேர்த்தார். வெலாசிட்டி தரப்பில் கேட் கிராஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை துரத்திய வெலாசிட்டி அணிக்கு ஷஃபாலி வர்மா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதன்மூலம் அரைசதம் கடந்த ஷஃபாலி வர்மா 51 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய யஷ்திகா பாட்டியா 17 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த லாரா வோல்வார்ட் - கேப்டன் தீப்தி ஷர்மா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சிறப்பாக விளையாடிய லாரா வோல்வார்ட் அரைசதம் கடந்தார். இதன்மூலம் வெலாசிட்டி அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தியது.