மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியும், சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசியும் அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 27ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.

Advertisement

இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அவருடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 ரன்களைச் சேர்த்த நிலையில் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தர்.  இதனால் இந்திய மகளிர் அணி 98 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.

இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்பிரீத் கவுர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 52 ரன்களைச் சேர்த்தார்.  இதன்மூலம் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களையும், ரிச்சா கோஷ் 6 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில்  சமாரி அத்தபத்து மற்றும் அமா காஞ்சனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் நட்சத்திர வீரராங்கனைகள் விஷ்மி குணரத்னே ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் சமாரி அத்தபத்து ஒரு ரன்னிலும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 6 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கவிஷா தில்ஹாரி மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். 

ஆனால் அவர்களாலும் நீண்ட நேரம் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதில் கவிஷா தில்ஹாரி 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 20 ரன்களைச் சேர்த்திருந்த சஞ்சீவனியும் தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சுகந்திகா குமாரி, இனோஷி பிரியதர்ஷினி ஆகியோரும் அடுத்டுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையை கட்டினர். அதேசமயம் இப்போட்டியில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய அமா காஞ்சனா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

இதனால் இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய் ஆருந்ததி ரெட்டி மற்றும் ஆஷா சோபனா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீத்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News