மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சியை தொடங்கியது இந்திய மகளிர் அணி!

Updated: Fri, Sep 27 2024 21:48 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக வங்கதேசத்தில் நடைபெற இருந்த இத்தொடரானது, அங்கு நடைபெற்ற உள்நாட்டு கலவரம் காரணமாக தற்சமயம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய மகளிர் அணியானது அக்டோபர் 04ஆம் தேதி துபாயில் நடைபெறும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியானது அக்டோபர் 06ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.

மேலும் இத்தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியையும் பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி ஹர்மன்பிரீத் கவுர் அணியின் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணைக்கேப்டனாகவும் இத்தொடரில் செயல்படவுள்ளார். மேற்கொண்டு இந்த இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ரேனுகா சிங் தாக்கூர், தயாளர் ஹேமலதா, சஜனா சஜீவன் என நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி துபாய் சென்றடைந்த இந்திய மகளிர் அணியானது இன்றைய தினம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள இப்புகைபடங்கள் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இந்திய மகளிர் அணி: ஹர்மன்ப்ரீத் கௌர்(கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஷ்திகா பாடியா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேனுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பட்டீல் *, சஜனா சஜீவன்.

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை