WPL 2023 Final: டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Sun, Mar 26 2023 22:47 IST
WPL 2023 Final: Mumbai Indians are the First Ever WPL champions! (Image Source: Google)

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்றுடன் முடிகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.  மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்  டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான மெக் லானிங் ஒருமுனையில் நிலைத்து நின்று பேட்டிங் ஆட, மறுமுனையில் ஷஃபாலி வெர்மா(11), அலைஸ் கேப்ஸி(0), ஜெமிமா ரோட்ரிக்ஸ்(9) ஆகியோர் இசி வாங்கின் பவுலிங்கில் மளமளவென ஆட்டமிழந்தனர். மேரிஸன் கேப் 21 பந்தில் 18 ரன்கள் அடித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நின்று விளையாடிய மெக் லெனிங் 35 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார். 

ஜெஸ் ஜோனாசென்(2), மின்னு மனி(1), டானியா பாட்டியா(0) ஆகிய மூவரும் ஹைலி மேத்யூஸின் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர். 79 ரன்களுக்கே டெல்லி கேபிடள்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஷிகா பாண்டே யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சருமாக விளாசி அசத்தினார். அவருடன் இணைந்த ராதா யாதவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடைசி விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 52 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிகா பாண்டா 17 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 27 ரன்களையும், ராதா யாதவ் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 27 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹெய்லி மேத்யூஸ், இஸி வாங் தலா 3 விக்கெட்டுகளையும் மெலி கெர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் யஷ்திகா பாட்டியா 4 ரன்களிலும், ஹெய்லி மேத்யூஸ் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - நாட் ஸ்கைவர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தடுத்துடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த இணையை பிரிக்க முடியாமல் டெல்லி அணி பந்துவீச்சாளர் திணறினர். 

அதன்பின் 37 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தேவையிலாமல் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நாட் ஸ்கைவர் அரைசதம் கடந்து அணியின் நம்பிக்கையை அதிகரித்தார். அவருடன் இணைந்த அமெலியா கெரும் அதிரடியாக விளையாட, கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியதுடன் மகளிர் பீரிமியர் லீக் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாட் ஸ்கைவர் 60 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை