WPL 2023: மும்பை இந்தியன்ஸை 127 ரன்களில் சுருட்டியது யுபி வாரியர்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 15ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஹீலி மேத்யூஸ் - யஷ்திகா பாட்டியா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷ்திகா பாட்டியா 7 ரன்களிலும், நாட் ஸ்கைவர் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் அதிரடியாக விளையாடிய ஹீலி மேத்யூஸ் 35 ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 25 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அமிலியா கெர் 3, அமன்ஜோட் கவுர் 5 ரன்கள் என ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய இஸி வாங் 19 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
யுபி வாரியர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், ராஜேஷ்வரி கெய்க்வாட், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.