இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு லாரா வோல்வார்ட் - பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய லாரா வோல்வார்ட் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் பெத் மூனியுடன் இணைந்த தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் கேப்டன் பெத் மூனி 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 3 ரன்களிலும், ஆஷ்லே கார்ட்னர் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தயாளன் ஹேமலதா 9 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 74 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேத்ரின் பிரைஸ் 7 ரன்களிலும், ஸ்நே ரானா ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழக்க, ஆட்டமிழக்காமல் இருந்த பாரதி ஃபுல்மாலி 21 ரன்களைச் சேர்த்து ஃபினீஷிங்கை கொடுத்தார்.
இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக சைகா இஷாக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது.