மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில், 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 28 ரன்கள் எடுத்த நிலையில் ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் அபார அட்டத்தை வெளிப்படுத்திய மெக் லெனிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய அலிஸ் கேப்ஸி 19 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 69 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை சேர்த்தது. மும்பை அணி தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக், பூஜா வஸ்திரேகர், ஹீலி மேத்யூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.