WPL 2024: அமெலிய கேர் அபார பந்துவீச்சு; 126 ரன்களில் சுருண்டது குஜராத் ஜெயண்ட்ஸ்!

Updated: Sun, Feb 25 2024 21:11 IST
Image Source: Google

இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்றுவரும் மூன்றாவது லீக் போட்டி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் - குஜராத் ஜெயண்ட்ஸும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தோடக்க வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் 7 ரன்களுக்கும், தயாளன் ஹேமலதா 3 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

அதேசமயம் அணியின் நம்பிக்கையாக இருந்த கேப்டன் பெத் மூனி 24 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஆஷ்லே கார்ட்னர் 15 ரன்களிலும், ஸ்நே ராணா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து அமெலிய கெர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து கேத்ரின் பிரைஸுடன் தனுஜா கன்வெர் இணை ஜோடி சேர்ந்து விளையாடினார். 

இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியை சவாலான இலக்கை நோக்கி அழைத்துச்சென்றார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களைச் சேர்த்திருந்த தனுஜா கன்வெர் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கேத்ரின் பிரைஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 25 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அமெலியா கெர் 4 விக்கெட்டுகளையும், ஷப்னம் இஸ்மாயில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை