WPL 2024: கிரண் நவ்கிரே மிரட்டல் அடி; மும்பையை வீழ்த்தி யுபி அபார வெற்றி!

Updated: Wed, Feb 28 2024 22:45 IST
Image Source: Google

இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, யுபி வாரியர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹீலி மேத்யூஸ் - யஷ்திகா பாட்டியா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.

இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்களைச் சேர்த்திருந்த யஷ்திகா பாட்டியா தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை நாட் கைவர் பிரண்ட் , ஹீலி மேத்யூஸுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் நாட் ஸ்கைவர் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி வெளியேற மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹீலி மேத்யூஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

பின் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களில் ஹீலி மேத்யூஸும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த அமெலியா கெர் - பூஜா வஸ்திரேகர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அமெலியா கெர் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 18 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஸி வாங் 15 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தார்.  இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தது. 

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - கிரண் நவ்கிரே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரண் நவ்கிரே 25 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்து மிரட்டினார். அதன்பின் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 57 ரன்கள் எடுத்த நிலையில் கிரண் நவ்கிரே தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 33 ரன்களில் அலிசா ஹீலியும் நடையைக் கட்டினார். 

அதன்பின் அதிரடி வீராங்கனை தஹ்லியா மெக்ராத் ஒரு ரன்னை மட்டுமே எடுத்த நிலையில் இஸி வாங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுது ஜோடி சேர்ந்த் கிரேஸ் ஹாரிஸ் மற்றும் தீப்தி சர்மா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். ஒருகட்டத்திற்கு மேல் அதிரடி காட்டிய இந்த அணி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் வெற்றியை எளிதாக்கினர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிரேஸ் ஹாரிஸ் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 38 ரன்களையும், தீப்தி சர்மா 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை