பந்து வீச சரியான வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்தோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32 ரன்களையும், காஷ்வி கௌதம் 20 ரன்களையும் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் ஹீலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளையும், நாட் ஸகைவர், அமெலியா கெர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில் யஷ்திகா பாட்டியா 8, ஹீலி மேத்யூஸ் 17, ஹர்மன்ப்ரீத் கவுர் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் அரைசதம் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதில் அவர் 57 ரன்களைச் சேர்க்க அவருக்கு துணையாக விளையாடிய அமெலியா கெர் 19 ரன்களையும், சஜீவன் சஞ்சனா 10 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “இப்போட்டிக்கு முன் நாங்கள் எதைப் பற்றி பேசினோமோ, அதை நாங்கள் சிறப்பாக செயல்படுத்தினோம். எங்கள் திட்டங்களின்படி எல்லாம் நடந்ததில் மிகவும் மகிழ்ச்சி. முதல் ஆறு ஓவர்கள் மிகவும் முக்கியமானவை. அதில் எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதில் பந்து வீச சரியான வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்தோம், அது எங்களுக்கு ஒரு நிலையான தொடக்கத்தைக் கொடுத்தது” என்று கூறினார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் விளையாடிய முதல் லீக் போட்டியில் இறுதிவரை போராடிய நிலையில், கடைசி பந்தில் தோல்வியைத் தழுவி அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் அதிலிருந்து மீண்டு அந்த அணி தற்போது இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனையடுத்து மும்பை அணியின் முதல் வெற்றியை அந்த அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.