வலுக்கட்டாயமாக நீங்கள் எதையும் செய்ய முடியாது - விருத்திமான் சஹா!
இந்திய சீனியர் ஆடவர் அணிக்கான புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இதில் வழக்கம்போல் ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர்கள் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் கிரேட் பி பிரிவிலும், இஷான் கிஷான் கிரேட் சி பிரிவிலும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியது. காரணம் இவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம்பெறாம் இருந்த நிலையில் அவர்களை பிசிசிஐ உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் படி கேட்டுக்கொண்டது.
ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கெண்டதும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்ததன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதன் விளைவாகவே தற்போது ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரது ஒப்பந்ததை பிசிசிஐ ரத்து செய்துள்ளது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, வீரர்களை பிசிசிஐ கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “இது பிசிசிஐயின் முடிவு மற்றும் சம்பந்தப்பட்ட வீரர்களின் தனிப்பட்ட முடிவு. ஆனால் வலுக்கட்டாயமாக, நீங்கள் எதையும் செய்ய முடியாது.
எப்போதெல்லாம் நான் உடல்தகுதியுடன் இருக்கிறேனோ அப்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன். நான் எப்போதும் ஒரு போட்டியை ஒரு போட்டியாகவே கருதுகிறேன். எனக்கு எல்லா போட்டிகளும் சமம். ஒவ்வொரு வீரரும் இந்த வழியில் சிந்தித்தால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள், அது இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்லது.
உள்நாட்டு கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் எப்போதும் இருப்பதாக நான் உணர்கிறேன். ஏனெனில் சர்ஃப்ராஸ் கான் கூட கடந்த 4-5 ஆண்டுகளில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஏராளமான ரன்களை குவித்திருப்பதன் காரணமாகவே அவருக்கு தற்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலமாகவே அவர் தனது அறிமிக போட்டியிலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.