ஜெய்ஷ்வாலின் தந்த பானி பூரி வித்தாரா? - உண்மையை உடைத்த பயிற்சியாளர்!

Updated: Thu, Aug 03 2023 14:46 IST
Image Source: Google

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் தொடக்க ஆட்டக்காரராக நிலையான இடத்தை பிடித்துவிட்ட இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த ஐபிஎல் சீசனில், சிறப்பாக செயல்பட, அவர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.  இந்திய அணிக்கும் தேர்வாகி முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். ஆனால் இவர் குறித்த ஒரு செய்தி அவர் மிளிரத்தொடங்கிய நாள் முதலே வந்து கொண்டிருக்கிறது.

அவர் தந்தை ஒரு பானி பூரி வியாபாரி என்றும், இவர் அந்த கடையில் வேலை செய்வது போன்ற புகைப்படமும் வெளியாகி வைரலாகி இருந்தது. ஆனால் தற்போது அவரது சிறு வயது கிரிக்கெட் பயிற்சியாளர் ஜ்வாலா சிங் அதனை மறுத்துள்ளார்.  சமீபத்திய பேட்டியில், ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளர் ஜ்வாலா சிங், ஜெய்ஸ்வால் தெருக்களில் பானி-பூரி விற்றதாக வைரலான செய்தியை பார்த்து மனமுடைந்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2013-இல் ஆசாத் மைதானத்தில் என்னைச் சந்தித்தார், அவர் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. அவரது தந்தை மிகவும் கடினமாக உழைத்த நிலையிலும் வறுமையில்தான் இருந்தார். ஆசாத் மைதானத்தில் பானி-பூரி தள்ளுவண்டிகள் இருக்கும். ஜெய்ஸ்வால் நண்பர்களுடன் சென்று அவர்களுடன் பேசி பழக்கமானவர். சில சமயங்களில் அந்த கடைகளில் பானி பூரிகளை விற்று 20-25 ரூபாய் சம்பாதிப்பார்.

ஜெய்ஸ்வால் பானி-பூரி விற்கும் ஒருவரின் அருகில் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் மற்றும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. அவரை அவரது தந்தை என்று கூறுகிறார்கள். 2018ஆம் ஆண்டில், அவர் முதல் முறையாக அண்டர் 19 அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​ஒரு தொலைக்காட்சி என்னை அணுகி, ஜெய்ஸ்வால் பானி-பூரி விற்பது போன்ற காட்சிகளை எடுக்க கேட்டனர். நான் அந்த விஷயத்தில் ஏமாற்றமடைந்தேன், ஆனால் அந்நிறுவம் சாதாரணமான விஷயம்தான் என்று கூறி, எப்படியோ அந்த காட்சிகளை எடுத்தது.

புகைப்படத்தில் அவருக்கு அடுத்திருப்பவர் அவரது தந்தை என்று ஊடகங்கள் கூறுகின்றன, ஆனால் ஜெய்ஸ்வாலின் தந்தை 2013 முதல் 2022 வரை ஒரு சில முறை மட்டுமே பணி நிமித்தமாக மும்பைக்கு வந்துள்ளார். இந்த காலகட்டத்தில், ஜெய்ஸ்வால் என்னுடன்தான் தங்கியிருந்தார். என் குடும்பத்தில் ஒருவராக நினைத்தோம். நாங்கள் அவரை ஒரு மாணவனைப் போல நடத்தவில்லை, எங்கள் சொந்தக் குழந்தையாகக் கருதி அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தோம்.

அவர் பானி-பூரி விற்கிறார் என்ற போலிக் கதைகளைப் பார்ப்பது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏனெனில் அதில் ஒரு பகுதி மட்டுமே உண்மை. இதுபோன்ற கதைகள் வைரலாகும்போது, பயிற்சியாளராகவும், ஒரு தந்தையின் இடத்திலும் இருந்து பார்க்கும்போது, வலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::