டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவது அவசியம் - முகமது கைஃப்!

Updated: Wed, Dec 06 2023 11:49 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. குறிப்பாக ரோஹித் சர்மா தலைமையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா இறுதிப்போட்டியில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதில் இடம் பெறாத ரோஹித் சர்மா அடுத்ததாக நடைபெறும் தென் ஆப்பிரிக்க டி20 தொடரிலும் ஓய்வெடுக்க உள்ளதால் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக பேட்டிங்கில் மிகவும் சுமாராக விளையாடிய ரோஹித் சர்மா இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரிலும் சொதப்பலாக செயல்பட்டு வருவதால் அவரை கழற்றி விட்டு 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை களமிறக்கும் வேலையை பிசிசிஐ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் அடித்து நொறுக்கி அதிரடியான தொடக்கத்தை கொடுத்த பேட்ஸ்மேன் என்பதை தாண்டி கேப்டன்ஷிப் திறமைக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவது அவசியம் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக இருப்பதை விட கேப்டனாக 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தேவை. நல்ல தலைமை பண்புகளை கொண்டுள்ள அவர் கண்டிப்பாக அத்தொடரில் இருக்க வேண்டும். குறிப்பாக 50 ஓவர் உலகக் கோப்பையில் அவர் கேப்டனாக அணியை முன்னின்று வழி நடத்தி தன்னுடைய வேலையில் சிறப்பாக செயல்பட்டார். 

எனவே அவருடைய அனுபவம் டி20 போட்டிகளிலும் தேவை. ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சிறந்த வேலையை செய்துள்ளார். எனவே டி20 போட்டிகளிலும் அவர் கண்டிப்பாக இந்தியாவுக்கு தேவை” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை