ரோஹித் சர்மா வித்யாசமான லெவலில் பேட்டிங் செய்து வருகிறார் - யுவராஜ் சிங்!

Updated: Sat, Nov 18 2023 14:54 IST
ரோஹித் சர்மா வித்யாசமான லெவலில் பேட்டிங் செய்து வருகிறார் - யுவராஜ் சிங்! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை மதியம் 2 மணிக்கு அஹ்மதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இந்தியா தோற்கடித்து வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பேட்டிங் துறையில் கடைசி முயற்சியாக சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது. ஏனெனில் இருவருமே ஏற்கனவே சிறப்பாக விளையாடி 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ள நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி வலுவான தொடக்கத்தை கொடுத்து அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கி வருகிறார்.

அத்துடன் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற போதிலும் 2022 டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றியை பதிவு செய்ய தவறிய அவர் கேப்டனாக இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்து தம்முடைய தரத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு இப்போட்டியில் உதவும் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா வித்யாசமான லெவலில் பேட்டிங் செய்து வருகிறார். அவர் மட்டும் 40 பந்துகள் எதிர்கொண்டால் 70 – 80 ரன்களை எளிதாக அடித்து விடுவார். ஒருவேளை 100 பந்துகள் எதிர்கொண்டால் அவர் இரட்டை சதமடிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் ரோஹித் சர்மா எப்போதுமே அணியின் வீரர். அவர் தனக்காக விளையாடாமல் அணிக்காக தான் முதலில் விளையாடுவார். 

அதனால் தான் அவர் இந்தளவுக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வெற்றிகரமாக இருக்கிறார். ரோஹித் சர்மாவை பற்றிய நல்ல விஷயம் என்னவெனில் அவர் அழுத்தமான சமயங்களிலும் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்யக்கூடியவர். ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றுள்ள அவர் ஏராளமான அனுபவத்தையும் சம்பாதித்துள்ளார். அவருக்கு முக்கிய நேரங்களில் பவுலர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை