ஐபிஎல் 2023: 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சஹால் புதிய சாதனை!

Updated: Sun, Apr 02 2023 20:25 IST
Yuzvendra Chahal becomes the first Indian bowler to pick 300 T20 wickets! (Image Source: Google)

ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று ஹைதராபாத்தில் நடந்துவரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் புவனேஷ்வர் குமார் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் 3 வீரர்களான ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். அதிரடியாக பேட்டிங் ஆடி 20 பந்தில் அரைசதம் அடித்த பட்லர் 22 பந்தில் 54 ரன்கள் அடித்தார். ஜெய்ஸ்வால் 37 பந்தில் 54 ரன்களும், சாம்சன் 32 பந்தில் 55 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

204 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ரயால்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதில் ஹாரி ப்ரூக்கை 13 ரன்களுக்கு வீழ்த்தினார் யுஸ்வேந்திர சாஹல். இது டி20 கிரிக்கெட்டில் சஹாலின் 300வது விக்கெட்.  சர்வதேச டி20, ஐபிஎல், உள்நாட்டு டி20 ஆகியவற்றில் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக 300 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் சஹால். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 91 விக்கெட்டுகளையும், ஐபிஎல்லில் 168 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற அமித் மிஸ்ராவின் (166) சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார். ஹாரி ப்ரூக் மற்றும் மயன்க் அகர்வாலின் விக்கெட்டுகளுடன் சேர்த்து மொத்தமாக ஐபிஎல்லில் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  இதன்மூலம் ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார். மேலும் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் சாஹல் படைத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை