ஜிம்பாப்வேவில் சுற்றுப்பாயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி சாதனை படைத்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.அதன்பின் அபிஷேக்குடன் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் இந்திய அணி முதல் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் அதிரடி காட்டத் தொடங்கிய அபிஷேக் சர்மா அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார்.
இதன்மூலம் 32 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த அபிஷேக் சர்மா அதன்பின், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் சதமடித்த அடுத்த பந்திலேயே அபிஷேக் சர்மா 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 100 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார் . இதனையடுத்து ரிங்கு சிங் களமிறங்க, அபிஷேக் விட்டுச்சென்ற அதிரடியை ருதுராஜ் கெய்க்வாட் கையிலெடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன், தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
அவருடன் இணைந்து ரிங்கு சிங்குவும் பவுண்டரிகளை பறவிட இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 77 ரன்களையும், ரிங்கு சிங் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 48 ரன்களையும் சேர்த்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸிங் முசரபானி மற்றும் லுக் ஜோங்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு இன்னசெண்ட் கையா - வெஸ்லி மதேவெரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பவுண்டரியும் இன்னிங்ஸைத் தொடங்கிய கையா 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய பிரையன் பென்னட் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசினர். அதன்பின் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் என 26 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் பிரையன் பென்னட் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தியான் மேயர்ஸ், கேப்டன் சிக்கந்தர் ரஸா ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜானதன் காம்பெல் 10 ரன்களுக்கும், கிளைவ் மடாண்டே ரன்கள் ஏதுமின்றியும், வெலிங்டன் மஸகட்ஸா ஒரு ரன்னிலும் என ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வெஸ்லி மதேவெராவும் 43 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் லுக் ஜோங்வா 33 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்பினர். இதனால் ஜிம்பாப்வே 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.