ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் வைத்துள்ளனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் ஓவரில் இருந்தே பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அபாரமாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இப்போட்டியில் தனது அரைசதத்தை பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் சர்மாவும் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 10 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில்லும் கேப்டனாக தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்களைக் கடந்தது. அதன்பின் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் அரைசதத்தை நெருங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 49 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்துள்ளது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸிங் முசரபானி மற்றும் கேப்டன் சிக்கந்தர் ரஸா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மதேவெரா - மருமணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மதேவெரா ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 13 ரன்கள் எடுத்திருந்த மருமணியும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய பிரையன் பென்னட் 4 ரன்களுக்கும், கேப்டன் சிக்கந்தர் ரஸா 15 ரன்களுக்கும், ஜானதன் காம்பேல் ஒரு ரன்னிற்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, ஜிம்பாப்வே அணி 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் இணைந்த தியான் மேயர்ஸ் - கிளைவ் மடாண்டே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுதினர். இருவரும் இணைந்து தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசியதன் மூலம் 6ஆவது விக்கெட்டிற்கு 77 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்த கிளைவ் மடாண்டே 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தியான் மேயர்ஸ் தனது முதல் டி20 அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அவருடன் இணைந்த வெல்லிங்டன் மசகட்ஸாவும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தியான் மேயர்ஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 57 ரன்களையும், வெல்லிங்டன் மசகட்ஸா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களையும் சேர்த்தனர். இருப்பின்ய்ம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.