ZIM vs PAK, 2nd T20I: சுஃபியான் முகீம் சுழலில் 57 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தானை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் - தடிவானாஷே மருமணி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 37 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 16 ரன்களை எடுத்திருந்த நிலையில் ம்ருமணி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 21 ரன்களைச் சேர்த்த நிலையில் பிரையன் பென்னட்டும் ஆட்டமிழந்தார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா 3 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் தியான் மெயார்ஸ் 3 ரன்னிலும், ரியான் பார்ல் ஒரு ரன்னிலும், கிளைவ் மடாண்டே 9 ரன்னிலும், தஷிங்கா ரன்கள் ஏதுமின்றியும், வெல்லிங்டன் மஸகட்ஸா 3 ரன்னிலும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் ஜிம்பாப்வே அணி 12.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுஃபியான் முகீம் 3 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுதவிரா அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், அப்ராஸ் அஹ்மத், ஹரிஸ் ராவுஃப், சல்மான் அலி ஆகா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தின்ர்.