ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள்; முழு பட்டியல்!

Updated: Mon, Mar 04 2024 15:31 IST
Image Source: Google

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவிக்கும் வீரரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், மேத்யூ ஹெய்டன், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர் எனும் சாதனையை டேவிட் வார்னர் தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் சீசன் முதல் தற்போது வரை ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்களின் பட்டியலை இங்கு காண்போம்.

ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள்

ஷான் மார்ஷ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 2008) - ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார். அவர் அத்தொடரில் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரைசதங்கள் என 68.44 சராசரியுடன் 618 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேத்யூ ஹைடன் (சென்னை சூப்பர் கிங்ஸ-2009) - ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனில் அதிக ரன்களை கு்வித்த வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மேத்யூ ஹைடன் இருந்தார். அந்த ஐபிஎல் தொடரில் அவர் 12 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்களுடன் 52 சராசரியில் 572 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சச்சின் டெண்டுல்கர் (மும்பை இந்தியன்ஸ் -2010) - கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியதற்கு 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரே சாட்சி. ஐபிஎல் தொடரின் மூன்றாவது சீசனான அதில் மொத்தம் 15 போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 5 அரைசதங்களுடன், 47.53 என்ற சராசரியில் 618 ரன்களைச் சேர்த்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தினார். 

கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி 2011 & 2012) - டி20 கிரிக்கெட்டில் அதிரடிக்கு பெயர் போன வெஸ்ட் இண்டிஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் பெயர் இப்பட்டியலில் இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியமே. ஏனெனில் சிக்சர் மழை பொழியும் அவர், கடந்த 2011ஆம் ஐபிஎல் தொடரில் 2 சதங்கள், 3 அரைசதங்களை விளாசி 67.55 என்ற சராசரியில் 608 ரன்களை குவி்த்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். 

அதனைத் தொடர்ந்து 2012 ஐபிஎல் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் கெய்ல் அதிக ரன்களை விளாசியவருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றார். 2012ஆம் ஆண்டும் ஆர்சிபி அணியில் விளையாடிய கெயில், ​15 போட்டிகளில் 61.08 சராசரியில் 733 ரன்கள் எடுத்தார். இதில் 1 சதம் மற்றும் 7 அரைசதங்களும் அடங்கும். 

மைக்கேல் ஹஸ்ஸி (சிஎஸ்கே 2013)- ரசிகர்களால் மிஸ்டர் கிரிக்கெட்டர் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹஸ்ஸியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மைக்கேஎல் ஹஸ்ஸி 17 போட்டிகளில் விளையாடி 6 அரைசதங்களுடன், 52.35 என்ற சராசரியில் 733 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தினார். 

ராபின் உத்தப்பா (கேகேஆர் - 2014) - ஐபிஎல் தொடரில் கேகேஅர் அணி தங்கள் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ராபின் உத்தப்பா. அவர், ஐபிஎல் தொடரின் 7ஆவது சீசனில் கேகேஆர் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்களுடன், 44 என்ற சராசரியில் 660 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார். 

டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 2015, 2017, 2019) - ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர் எனும் சாதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் படைத்துள்ளார். அதன்படி 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய வார்னர் 7 அரைசதங்களுடன் 562 ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

அதன்பின் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய வார்னர், அத்தோடரில் 14 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் என 641 ரன்களைக் குவித்து இரண்டாவது முறையாக ஆரஞ்ச் தொப்பியை வென்று அசத்தினார். பின் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய வார்னர், ஒரு சதம், 8 அரைசதங்கள் என 692 ரன்களைக் குவித்து மூன்றாவது முறையாக ஆர்ஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி (ஆர்சிபி- 2016) - இந்திய கிரிக்கெட் அணியின் ரன்மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி, ஐபிஎல் தொடரிலும் தான் ஒரு ரன்மெஷின் என்பதை நிரூபித்த ஆண்டு 2016. அந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ருத்ரதாண்டவமாடிய விராட் கோலி, 16 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 7 அரைசதங்களுடன் 81.08 என்ற சராசரியில் 973 ரன்களைக் குவித்தார். இதுநாள் வரை ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகவும் இது இருந்து வருகிறது.  

கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-2018) - ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய கேன் வில்லியம்சன் அந்த சீசனில் அதிக ரன்களை அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதன்படி 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் 17 போட்டிகளில் விளையாடி 8 அரைசதங்களுடன் 52.50 என்ற சராசரியில் 735 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஎல் ராகுல் (பஞ்சாப் கிங்ஸ் - 2020) - இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த கேஎல் ராகுல் கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார். அத்தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல், 14 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரைசதங்கள் என 55.83 சராசரியுடன் 670 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார். 

ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே 2021) - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2021ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடிய 16 போட்டிகளில் ஒரு சதம், 4 அரைசதங்கள் என 45.35 சராசரியில் 635 ரன்கள் எடுத்ததுடன் ஆரஞ்சு தொப்பியையும் வென்று அசத்தினார். 

ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ் - 2022) - 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவர் அந்த சீசன் ஐபிஎல் தொடரில் விளையாடிய 17 போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 863 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் அந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றி அசத்தினார். 

ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ் - 2023) - இந்திய கிரிக்கெட் அணியின் இளவரன் என அழைக்கப்படும் ஷுப்மன் கில் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய அபார ஆட்டத்தின் மூலமாக இந்திய அணிக்கு தேர்வான வீரர்கள் ஒருவர். இவர் கடந்தாண்டு ஐபிஎ தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 4 அரைசதங்கள் என 59.33 சராசரியில் 890 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை