
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது 100ஆவது டெஸ்ட் போட்டி குறித்து பேசிய அஸ்வின், “சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது நிச்சயம் மிகப்பெரிய தருணம். சென்றடையும் இடத்தை காட்டிலும் இந்த பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பயணத்தில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். நிறைய விஷங்களை கற்றும் இருக்கிறேன். அதேசமய் இது எப்போதும் போல இதுவும் ஒரு பொட்டி தான் . அதனால் நான் தயாராகும் விதத்தில் எந்த மாற்றமுல் இல்லை. எங்களுக்கு டெஸ்டில் வெற்றி பெறுவது தான் முக்கியம்.