
ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6ஆவது தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிர்ச்சி தோல்வியைத் தழுவி இருந்தாலும், அறிமுக வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அதன்படி, இப்போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் உறையவைத்தார். அந்தவகையில் இன்னிங்ஸின் முதல் ஓவரை ஷர்தூல் தாக்கூர் வீசிய் நிலையில், அந்த ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட சூர்யவன்ஷி மிட் ஆஃப் திசையில் இமாலய சிக்ஸரை பதிவுசெய்து தனது ஐபிஎல் வருகையை உலகிற்கு தெரியப்படுத்தினார்.