
பொதுவாக மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் என்றால் பெரிய சிக்ஸர்கள் எல்லாம் அடிக்க மாட்டார்கள் என்று ஒரு கருத்து நிலவும். அந்த கருத்தை சுக்குநூறாக உடைத்தவர் ஆயிஷா நசீம். ஆடவர் வீரர்களுக்கு சமமான பலத்தைக் கொண்ட வீராங்கனையாக திகழ்ந்த ஆயிஷா நசீம், தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் இளம் வயதிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
பாகிஸ்தான் அணிக்காக நான்கு ஒருநாள் மற்றும் நான்கு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடிய ஆயிஷா நசிம் 402 ரன்களை குவித்து இருந்தார். ஆயிஷா நசிம் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 20 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.
இந்த இன்னிங்ஸ் மூலம் தான் ஆயிஷா நசீம் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது. பாகிஸ்தானின் மிகப்பெரிய கிரிக்கெட் வீராங்கனையாக ஆயிஷா நசீம் திகழ்வார் என்று வசீம் அக்ரம் கூட பாராட்டி இருந்தார். இந்நிலையில் தான் ஆயிஷா தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு செய்தி அனுப்பி இருக்கிறார். அதில் தாம் தனது வாழ்க்கையை இனி இஸ்லாமிய முறைப்படி வாழப் போகிறேன். இதனால் நான் கிரிக்கெட்டை விடுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.