
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று வதோதராவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 110 ரன்களை எட்டிய நிலையில் பிரதிக 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனாவும் 13 பவுண்டரிகளுடன் 91 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் - ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ஹர்லீன் தியோல் 44 ரன்னிலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 34 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் ஜெமிமா 31 ரன்களையும், ரிச்சா கோஷ் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்களைச் சேர்த்தது. விண்டீஸ் தரப்பில் ஸைதா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.