IND vs AUS, 1st T20I: நாங்கள் சிறப்பாக பந்துவீசவில்லை - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காரணத்தை விளக்கியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொஹாலியின் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர் கேஎல் ராகுல் 55, சூர்யகுமார் யாதவ் 46, ஹார்திக் பாண்டியா 71 ஆகியோர் அதிரடியாக விளையாடியதால், இந்திய அணி 20 ஓவர்களில் 208/6 ரன்களை குவித்தது.
Trending
அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. அப்போது பவர் பிளேவில் ஓபனர் கேமரூன் கிரீனின் எல்பிடபிள்யு-வுக்கு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அப்பீல் செய்யவில்லை. இதனால், மறுவாழ்வு பெற்ற கிரீன் தொடர்ந்து காட்டடி அடிக்க ஆரம்பித்தார். அப்போது அக்சர் படேல், கேஎல் ராகுல் ஆகியோர் இவருக்கு கேட்சை விட்டனர்.
இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட கிரீன் 61 ரன்களை குவித்து நல்ல முறையில் அடித்தளமிட்டார். தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் 35 , டிம் டேவிட் 18 , மேத்யூ வேட் 45 ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கு 19.2 ஓவர்களில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 211/6 ரன்களை சேர்த்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
கடைசி நான்கு ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்டபோது புவனேஷ்வர் குமார் 15 ரன்கள், ஹர்ஷல் படேல் 22 ரன்கள், சஹல் 2 பந்துகளில் 4 ரன்கள் என வாரி வழங்கினர். இதனால்தான், இந்தியா தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தோல்வியை சந்தித்த பிறகு பேசிய ரோஹித் சர்மா,‘‘நாங்கள் சிறப்பாக பந்துவீசவில்லை. 200+ ரன்களை என்பது சிறந்த ஸ்கோர்தான். பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. பேட்டர்கள் மட்டுமே நல்லமுறையில் விளையாடினார்கள். பந்துவீச்சாளர்கள் இதில் பாதிகூட தீவிரமாக இருக்கவில்லை. இந்த பிட்ச் அதிக ரன்களை அடிக்க ஏற்ற பிட்சாகும். இதனால், அடிக்கடி விக்கெட்களை எடுத்தால் மட்டுமே போட்டியில் இருக்க முடியும். அதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதனை நாங்கள் கோட்டைவிட்டோம்.
கடைசி 4 ஓவர்களில் 60 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, பந்துவீச்சாளர்கள் தங்களால் முடிந்த சிறப்பினை வெளிப்படுத்தி கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் எக்ஸ்ட்ரா விக்கெட்களை எடுக்காததுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. தினமும் 200 ரன்களை அடிக்க முடியாது. கடுமையாக போராடி பேட்டர்கள் இந்த ரன்களை அடித்தார்கள். ஹார்திக் பாண்டியாவுக்கு எனது பாராட்டுக்கள்’’ எனக் கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now