
வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்று தொடங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையிலும், இறுதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் குறிப்பாக அந்த அணியில் அதிகபட்ச ஸ்கோரே ஷாகிப் அல் ஹசன் விளாசிய 32 ரன்களே இருந்தது. இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஆகஷ் தீப், முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.