
ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடரானது நடைபெற்ற முடிந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி, களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பென் கரண் மற்றும் ஜெய்லார்ட் கும்பி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கும்பி 9 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் பென் கரணுடன் இணைந்த கைடானோவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீரர் பென் கரண் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில் 68 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் கைடானோவுடன் இணைந்த சீன் வில்லியம்ஸும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் கைடானோ 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து களமிறங்கிய டியான் மெயர்ஸும் 27 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் சீன் வில்லியம்ஸுடன் இனைந்த கேப்டன் கிரேய்க் எர்வினும் சிறாப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சீன் வில்லியம்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்தார்.