
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து டிசம்பர் 1ஆம் தேதியன்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்த அந்த அணி உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட பாகிஸ்தான் பவுலர்களை லோக்கல் பவுலர்களை போல் சரமாரியாக வெளுத்து வாங்கினார்கள். குறிப்பாக 233 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்கள் பென் டன்கட் 107 ரன்களும் ஜாக் கிராவ்லி 122 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.
அதை தொடர்ந்து வந்த ஜோ ரூட் 23 ரன்னில் அவுட்டானாலும் ஓலி போப் தனது பங்கிற்கு சதமடித்து 108 ரன்கள் எடுக்க இளம் வீரர் ஹரி ப்ரூக் தமக்கே உரித்தான ஸ்டைலில் இதர வீரர்களை விட அதிரடியாக விளையாடி சதமடித்தார். அதனால் 75 ஓவரிலேயே 506/4 ரன்களை கடந்த இங்கிலாந்து எளிதாக 600 ரன்களை நோக்கி பயணித்த வேளையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது.