
SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அகியோர் அபாரமான ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 495 ரன்களைக் குவித்தது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்களையும், லிட்டன் தாஸ் 90 ரன்களையும் சேர்த்தனர்.இலங்கை அணி தரப்பில் அசித்த ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், தரிந்து ரத்நாயக்க, பிரியானந்த் ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 187 ரன்களையும், தினேஷ் சண்டிமல் 54 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் மற்றும் கேப்டன் தனஞ்செயா டி சில்வா இணை ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 368 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய 4ஆம் நாள் ஆட்டத்தை கமிந்து மெண்டிஸ் 37 ரன்களுடனும், தனஞ்செய டி சில்வா 17 ரன்களுடனும் தொடர்ந்தனர்.