
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 1992 மேஜிக் மீண்டும் நிகழ்த்துவோம் என்று கூறி இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அடுத்ததாக அதே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து களமிறங்கியுள்ளதால் அனைவரது எதிர்பார்ப்பும் அதிகமானது. அந்த நிலைமையில் இன்று ராவில்பிண்டி நகரில் தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிரௌலி – பென் டக்கெட் ஆகியோர் டெஸ்ட் போட்டி என்பதை மறந்து பவர் பிளே போல ஆரம்பம் முதலே அதிரடியாக குவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடி நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகளை தோற்கடித்த அதே யுக்தியை இப்போட்டியிலும் கையாண்ட இங்கிலாந்து இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு ஒவ்வொரு ஓவரிலும் அதிரடியான பவுண்டரிகளை தெறிக்க விட்டது.
அதிலும் குறிப்பாக உலகிலேயே தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட அணி என்று கருதப்படும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கிய தொடக்க வீரர்கள் இருவருமே சதமடித்து வெறும் 35.4 ஓவரில் 233 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 15 பவுண்டரியுடன் பென் டன்கட் 107 ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் வெளுத்து வாங்கிய ஜாக் கிராவ்லி 21 பவுண்டரியுடன் 122 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஜோ ரூட் சற்று கருணையுடன் 23 ரன்களிலேயே ஆட்டமிழந்து சென்றார். ஏனெனில் அவருடன் களமிறங்கிய மற்றொரு வீரர் ஒல்லி போப் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி 14 பவுண்டரியுடன் சதமடித்து 108 ரன்கள் விளாசி மகிழ்ச்சியுடன் அவுட்டானார்.