
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா இரட்டை சதமடித்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கில்ஸ் ஆகியொர் சதம் அடித்தும் அசத்தினர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 232 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 102 ரன்களையும் சேர்த்தனர்.இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வேண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் ஒஷாதா ஃபெர்னாண்டோ, திமுத் கருணரத்னே மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து வந்த தினேஷ் சண்டிமால் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரைசதம் கடந்து அசத்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸ் 15 ரன்களிலும், தனஞ்செயா டி சில்வா 22 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் தினேஷ் சண்டிமாலுடன் இணைந்துள்ள குசால் மெண்டிஸ் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தார். அதன்பின் மழை குறுக்கிட்டதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் உணவு இடைவேளையுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களைச் சேர்த்திருந்தது.