
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிஷன் மதுஷ்கா 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் 16 ரன்களுக்கும், திமுத் கருணரத்னே 17 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய அனுபவ வீரர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ் 5 ரன்களுக்கும், தினேஷ் சண்டிமல் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் இலங்கை அணி 57 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இணைந்த தனஞ்செயா டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து அசத்தினர். இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் இவர்களை பிரிக்க முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.