இந்திய அணி வெற்றி பெற்றதற்கான முழு புகழும் திலக் வர்மாவை சாரும் - ஜோஸ் பட்லர்!
இப்போட்டியில் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும், அனைவரும் தங்களது முழு உழைப்பையும் கொடுத்ததை பார்ப்பது மிகவும் நன்றாக இருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 45 ரன்களையும், பிரைடன் கார்ஸ் 31 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 12 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 5 ரன்னிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னிலும், துருவ் ஜுரெல் 4 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 7 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க, இந்திய அணி 78 ரன்களுக்குள் 5 விக்கெட் இழந்து திணறியது.
Trending
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். மேற்கொண்டு 6ஆவது விக்கெட்டுக்கு திலக் வர்மா-வாஷிங்டன் சுந்தர் ஜோடி 38 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் 26 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த அக்ஸர் படேல், மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, ஆட்டமும் பரபரப்பான கட்டத்தை எட்டியது.
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் இந்திய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.மேற்கொண்டு இப்போட்டியின் ஆட்டநாயகனாக திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டார்.
இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், “இது ஒரு சிறந்த ஆட்டம். இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கான முழு புகழும் திலக் வர்மாவையே சாரும். நாங்கள் வெற்றிபெறுவதற்கு நிறைய வாய்ப்புகளை உருவாக்கினோம். இப்போட்டியில் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும், அனைவரும் தங்களது முழு உழைப்பையும் கொடுத்ததை பார்ப்பது மிகவும் நன்றாக இருந்தது.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்த விதத்திலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி. ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தோம், ஆனால் நாங்கள் கேட்ட ஆக்ரோஷம் இருந்தது, உண்மையில் ஆட்டத்தை எடுத்துச் சென்றது மற்றும் கிட்டத்தட்ட பாதுகாக்கக்கூடிய ஸ்கோரை எட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் விளையாடிய பாணியில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதிலும் குறிப்பாக அறிமுக போட்டியில் ஜேமி ஸ்மித் விளையாடிய விதம் அருமையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now