2nd Test, Day 2: சதத்தை தவறவிட்ட கமிந்து மெண்டிஸ்; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 531 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
Trending
அதன்படி களமிறங்கிய அந்த அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்குய இரண்டாம் நாள் ஆட்டத்தை தினேஷ் சண்டிமால் 34 ரன்களுடனும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா 15 ரன்களுடனும் தொடர்ந்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர்.
அதன்பின் 59 ரன்களுக்கு சண்டிமால் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 70 ரன்கள் சேர்த்த நிலையில் தனஞ்செயா டி சில்வாவும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய பிரபாத் ஜெயசூர்யா 28 ரன்களுக்கும், விஸ்வா ஃபெர்னாண்டோ 11 ரன்களுக்கும் லஹிரு குமாரா 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கமிந்து மெண்டிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கமிந்து மெண்டிஸ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என ஆட்டமிழக்காமல் இருந்தாலும், மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் தங்களது விக்கெட்டை இழந்ததால் அவரது சதத்தை தவறவிட்டார்.
இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 531 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் - ஸகிர் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மஹ்முதுல் ஹசன் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஸகிர் ஹசன் 28 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 476 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now