
SL vs BAN, 2nd Test: கொழும்புவில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி வலிமையான ஸ்கோரை குவித்ததன் மூலம் வெற்றிபெறும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷாத்மான் இஸ்லாம் 46 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம், 35 ரன்களையும், லிட்டன் தாஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் சோனல் தினுஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் லஹிரு உதாரா 40 ரன்களுக்கும், தினேஷ் சண்டிமால் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 93 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரர் பதும் நிஷங்கா 146 ரன்களுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரகளில் அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் 84 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 33 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 458 ரன்களைக் குவித்தது. வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளையும், நயீம் ஹசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.