Day-Night Test: நிதானம் காட்டும் ஆஸி; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று (டிசம்பர் 06) தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்தார்.இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர்.இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெஸ்வால் எதிர்கொண்ட முதல் பந்திலேயே மிட்செல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்து முயற்சியில் இறங்கினர்.
Trending
இதில், இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில்லும் 31 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்ம 3 ரன்களுக்கும், ரிஷப் பந்த் 21 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளி விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 22 ரன்களை எடுத்த கையோடு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த கேப்டன் ஜஸ்பிரித் பும்ராவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த நிதீஷ் ரெட்டியும் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 180 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
அஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கவாஜா 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் நாதன் மெக்ஸ்வீனி 38 ரன்களுடனும், மார்னஸ் லபுஷாக்னே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now