
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஜார்ஜியா வோல் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை 25 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரியும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெத் மூனியும் 10 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி 78 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த அனபெல் சதர்லேண்ட் - ஆஷ்லே கார்ட்னர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தது. இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன், 5ஆவது விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தின்ர். பின் 50 ரன்களை எடுத்த கையோடு ஆஷ்லே கார்ட்னர் விக்கெட்டை இழந்தார்.