அணிக்கு என்ன தேவையோ அதனை சரியாக கணித்து செய்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்து அணியுடனான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு ரிஸ்க்கை எடுக்காமல் தவிர்த்ததே வெற்றிக்கு காரணம் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து மோதிய கடைசி மற்றும் 3வது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களுக்குள் 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்த போட்டியில் இந்தியாவின் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என 3 துறைகளுமே ஆச்சரியம் கொடுத்தன. ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 126 ரன்களை விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரின் முதல் சதம் இதுவாகும். இதே போல பந்துவீச்சில் கேப்டன் பாண்ட்யா 4 விக்கெட்களும், அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.
Trending
இந்த சிறப்பான செயல்பட்டால், டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்தியா தனது மிக சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13வது டி20 தொடரை இந்தியா கைப்பற்றி அசைக்க முடியாத பலத்துடன் உள்ளதை நிரூபித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “ஒரு கேப்டனாக எப்போதுமே நான் ஏற்கனவே போட்டு வைத்துவிட்டு வந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டேன். ஒவ்வொரு ஓவரின் போதும் அணிக்கு என்ன தேவையோ அதனை சரியாக கணித்து செய்கிறேன். எனது கேப்டன்சியில் எப்போதுமே ஆட்டத்தை எளிதாக பார்க்க வேண்டும், தைரியத்துடன் இருக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்புவேன். அதுதான் நடந்துள்ளது.
இதே மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி விளையாடினோம். அப்போது 2வது இன்னிங்ஸ் சற்று காரசாரமாக சென்றது. ஆனால் இன்று அந்த அளவிற்கு செல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். தொடரின் கடைசி போட்டி என்பதால் முடிந்தவரை முன்கூட்டியே முடிக்க நினைத்தேன். அதனை அணி வீரர்கள் செய்துக்கொடுத்துவிட்டனர். தொடர்ந்து இதனை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now