
இந்தியா -வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சேர்ந்து ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினர். இருவரின் அதிரடியால் அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் எகிறியது. அதுமட்டுமின்றி தொடந்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 22 பந்துகளிலும், சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளிலும் என தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தனர்.
அத்துடன் நிறுத்தாத சஞ்சு சாம்சன் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 40 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 111 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்க, 75 ரன்களில் சூர்யகுமார் யாதவும் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் ரியான் பராக் 34 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 47 ரன்களையும் சேர்க்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களைச் சேர்த்தது.