
இலங்கை அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - டேனியல் லாரன்ஸ் இணை தோடக்கம் கொடுத்தனர். இதில் டேனியல் லாரன்ஸ் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் டக்கெட்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஒல்லி போப் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின்னரும் அதிரடியாக விளையாடி வந்த பென் டக்கெட் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 86 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஜோ ரூட் 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த கேப்டன் ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ்களிலும் சோபிக்க தவறி விமர்சனங்களுக்கு உள்ளான ஒல்லி போப் இப்போட்டியில் சதமடித்து அதற்கான பதிலடியைக் கொடுத்துள்ளார்.