
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் க்ரூப் பி பிரிவில் இடம்பிடித்திருந்த நமீபியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக கலீத் கைல் 34 ரன்களைச் சேர்த்தார். நமீபியா அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரூபன் டிரம்பெல்மேன் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வைஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணியிலும் மைக்கேல் வான் லிங்கன் ரன்கள் ஏதுமின்றியும், நிக்கோலஸ் டேவின் 24 ரன்களிலும், எராஸ்மஸ் 13 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதேசமயம் அணியின் நம்பிக்கையாக இருந்த ஜான் ஃபிரைலிங் 25 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நமீபியா அணி 109 ரன்களைச் சேர்த்து போட்டியை சமன்செய்தது. இதன்மூலம் இப்போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது.