
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் சாம் கொன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 34ஆவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு மீண்டும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தன்ர்.