
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இதன் மூலம், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான்கள் டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் இணைந்துள்ளார்.
இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஸ்டீவ் ஸ்மித் 111 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 68 ரன்கள் எடுத்து கிரீஸில் இருந்தார். இதற்கு முன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கிரேக் சேப்பல் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 முறை 50+ ஸ்கோரையும், முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேன் 11 டெஸ்ட் போட்டிகளில் 12 முறை 50+ ஸ்கோரையும் பதிவுசெய்து இரண்டாம் இடத்திலும் உள்ளார்.
இந்த பட்டியலில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 முறை 50+ ஸ்கோரை அடித்து மூன்றாம் இடத்தில் உள்ள நிலையில், தற்போது ஸ்டீவ் ஸ்மித் 12 போட்டிகளில் 10 முறை 50+ ஸ்கோரை அடித்து அசத்தியுள்ளார்.