
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியிlல் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமடம் மற்ற டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஷிவம் தூபே மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 30 ரன்களைச் சேர்த்தார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 13 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என 135 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அரைசதம் கடந்துடன், 23 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களில் ஆல் அவுட்டானது.