
பார்படாஸ் ராயல்ஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் மோதிய 16ஆவது சிபில் லீக் ஆட்டம் பார்படாஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்படாஸ் ராயல்ஸ் அணியானது குயின்டன் டி காக்கின் அபாரமான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 8 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 115 ரன்களைச் சேர்த்தார்.
கயானா அணி தரப்பில் ரெய்மன் ரெய்ஃபெர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கயானா அணியில் கேப்டன் ஷாய் ஜோப் 40 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 28 ரன்களையும், மொயீன் அலி 33 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கீமோ பால் 30 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை மட்டுமே எடுத்தது. ராயல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 32 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக குயின்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டார்.