டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென் ஆப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த அணி எனும் ஆஸ்திரேலியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்க அணி சமன்செய்துள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென், தப்ரைஸ் ஷமிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்திலேயே குயின்டன் டி காக்கின் விக்கெட்டை இழந்தாலும், அதன்பின் இணைந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஸா ஹென்றிக்ஸ் (29) - கேப்டன் ஐடன் மார்க்ரம் (23) ஆகியோர் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 8.5 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் மார்கோ ஜான்சென் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Trending
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அதன்படி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவுசெய்து அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்க அணி சமன்செய்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவுசெய்ததே சாதனையாக இருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியும் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணிகள்
- 8* - தென் ஆப்பிரிக்கா (2024)
- 8 - ஆஸ்திரேலியா (2022-2024)
- 7 - இங்கிலாந்து (2010-2012)
- 7 - இந்தியா (2012-2014)
மேற்கொண்டு, தென் ஆப்பிரிக்க அணி டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பதிவுசெய்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கடந்த 2007 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பதிவுசெய்ததே சாதனையாக இருந்த நிலையில், அச்சாதனையானது இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இன்றைய போட்டியில் ஆன்ரிச் நோர்ட்ஜே 2 விக்கெட்ட்களை கைப்பற்றியதன் மூலம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பதிப்பில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்
- 13 விக்கெட்டுகள்- அன்ரிச் நோர்ட்ஜே (2024)*
- 12 விக்கெட்டுகள்- இம்ரான் தாஹிர் (2014)
- 12 விக்கெட்டுகள்- காகிசோ ரபாடா (2024)*
- 11 விக்கெட்டுகள்- சி லாங்கேவெல்ட் (2010)
- 11 விக்கெட்டுகள்- அன்ரிச் நோர்ட்ஜே (2022)
- 11 விக்கெட்டுகள்- தப்ரைஸ் ஷம்சி (2024)*
Win Big, Make Your Cricket Tales Now