
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இரு அணிகளைத் தேர்வு செய்ய குவாலிஃபையர் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்று ஸ்காட்லாந்து அணிகள் முன்னேறியதன் மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளன.
இந்நிலையில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான தகுதிச்சுற்றுக்கு தொடருக்கான இறுதிப்போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு விஷ்மி குனரத்னே - கேப்டன் சமாரி அத்தப்பத்து இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விஷ்மி குனரதேன் 9 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதா 8 ரன்களிலும், கவிஷா தில்ஹாரி 15 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சமாரி அத்தபத்து தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் இலங்கை அணியும் இமாலய இலக்கை நோக்கி நகர்ந்தது. அதன்பின் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 102 ரன்களை குவித்த நிலையில் சமாரி அத்தப்பத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலக்ஷி டி சில்வா 26 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.